3 காந்தவிழிகள்

 

 

 

அன்றைய நாள்முழுதும் மதன் , கண்ணனிடம் அன்றுநடந்த நிகழ்ச்சிகளை மிகைப்படுத்திக் கூறியவாறே இருந்தான் . இவனின் காதலைப்பற்றி கேள்விபட்ட தேவி , மதனைவிட அதீத சந்தோஷத்தில் மிதந்தாள் . தனக்குப்பிறகு மதனைப்பார்த்துக்கொள்ள ஒருத்தி கிடைத்துவிட்டாள் என்கின்ற நினைப்பே அவளுக்கு ஒரு பெரும்சுமையையும் கவலையும் தீர்த்துவைத்தது போலிருந்தது . அவளும் தனக்குத்தெரிந்த டிப்ஸ்களை மதனிடம் கூறிக்கொண்டே இருந்தாள் .

 

‘டேய் மதன் . அவளுக்கு உன்ன பிடிச்சிருக்கு . அதுனால தான் அவ உன்ன திரும்பி பாத்தா . இனிமேல் தான் ஜாக்ரதையா இருக்கனும் . எப்பவும் பொண்ணுங்க கிட்ட கோவத்தமட்டும் காட்டிடாத . இனிமேல் இந்த மாதிரி கன்றாவியா ட்ரஸ் பண்ணாத . நல்ல டீசென்டா , ஜென்யூனா ட்ரஸ் பண்ணு . இது என்னடா பெர்ஃப்யூம் ? நல்லாவே இல்ல . பார்க் அவென்யூ ஸ்மெல்லாம் எந்த பொண்ணுக்கும் பிடிக்காது . ஃபா மாத்திக்கோ . குங்குமம் இட்டா உனக்கு எவ்ளோ அழகா இருக்கும் தெரியுமா ? இனிமேல் குங்குமம் வச்சிகிட்டே வா . அப்றம் தப்பித்தவறி தம் அடிச்சிட்டு அவ பக்கம் போய்டாத . ’ என்று தேவி ஏதேதோ கூறியவாறு இருந்தாள் . இதெல்லாம் ஏற்கனவே அவள் கூறியிருந்தாலும் , அப்போதெல்லாம் கேட்காத மதன் , இப்போதுமட்டும் அவள் கூறவதையெல்லாம் சிரத்தையுடன் கேட்டுக்கொண்டான் . ரேடியோ அலைகள் பற்றி பாடம் நடந்துகொண்டிருந்தபோது , இவனுடைய மனதில் காதல் அலைகள் ஓடிக்கொண்டிருந்தன . சீக்கிரம் 4.30 மணி ஆகாதா ? ஓடிப்போய் பஸ் ஸ்டான்டில் காத்திருக்கக்கூடாதா என்றவாறு எண்ணிக்கொண்டிருந்தான் . நாலரையிலிருந்து ஐந்து வரை கால்வலியே தெரியாமல் நின்றுகொண்டிருந்தான் . காதல்வலி ஆட்கொண்டிருக்கும்போது கால்வலி மாத்திரம் எப்படி தெரியும் ?

 

மையல் எனும் காதல்புயல் பஸ் ஸ்டாண்டில் மையம் கொண்டுவிட்டாள் என்பது அங்கிருக்கும் இளவட்டங்களின் சிகையலங்காரம் மற்றும் காத்திருப்புகளைவைத்தே அறிந்துகொள்ளலாம் . அவள் வந்ததும் வழக்கம்போல சிலகூத்துகளை , பல யூத்துகள் நடத்திக்கொண்டிருந்தனர் .காலையில் மாலினி மற்றும் சகதோழிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஓரளவு வெற்றிகரமாக முடிந்ததால் அடுத்தகட்ட நடவடிக்கையை மாலையில் முடித்துவிடவேண்டும் என்ற உறுதி மதனுக்குள் பிறந்தது . இயற்கையின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்தவள்போல் மையல்விழி வர , வின்சென்ட் வேன் காக்கின் , டாக்டர் கெச்சட் ஓவியம்போல அவள்வரும்திசையை  மதிமயங்கி பார்த்துக்கொண்டிருந்தான் . பேருந்துகளின் சத்தம் மறைந்து எங்கோ தூரத்தில் கிறிச்சிடும் சிட்டுக்குருவிகளின் சத்தம் அவன் காதுக்குள் கேட்கத்துவங்கியது. அவனுடைய கண்கள் அவளை மட்டும் ஃபோகஸ் செய்யும் தொழிலைச்சிறப்பாகச் செய்தது . அவளின் கால் சுண்டுவிரலில் புதிதாய் அடித்திருந்த ரோஜா நிற நெய்ல்பாலிஷ் கூட கவிதைகளால் வர்ணிக்கப்படவேண்டியவைதான் . அவளுக்கும் இவனைப்பார்த்ததும் தனக்குள் இருக்கும் பெண்மை ஊறிப்பெருக்கெடுக்கத் துவங்கியிருக்கவேண்டும் . நாணத்தாலோ அல்லது பயத்தாலோ தலைகுனிந்தவாறு , அவளின் தோழிகள் பேசும் பேச்சுக்கு சிந்தியும் சிந்தாமலும் சிரிப்பை உதிர்த்தவண்ணம் பஸ் ஸ்டாண்டில் வந்து நின்றாள் . இன்னும் பஸ் வரவில்லை.  மதன் நேராக மாலினியை நோக்கி நடந்தான் .

 

‘என்ன காலேஜ் போனிங்களா ? இல்ல இங்கயே ரவுண்ட் அடிச்சிட்டு இருக்கிங்களா ?’ என்றாள் மாலினி .

 

‘அதெல்லாம் போய்ட்டு வந்தாச்சு . இங்க எதுக்கு ரவுண்ட் அடிக்கனும் ?’

 

‘ஓ ! நாங்க கூட நீங்க எங்க ஃப்ரண்ட சைட் அடிக்கறதுக்காக இங்கயே நின்னுட்டு இருப்பிங்கனு நினச்சோம் ’ என்றாள் மைதிலி .

 

‘ஆமா ! உங்க ஃப்ரெண்ட் பெரிய கத்ரினா கைஃப் . அவங்களுக்கு வெயிட் பண்றதுக்கு .’ என்ற மதனின் விடையைக்கேட்ட மையலோ கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள் என்பதை அவளின் கண்கள் உணர்த்தியது .

 

‘ஹேய் ! வாங்கடி அங்க போலாம் .’ என்று மாலினிக்கு மட்டும் கேட்கும் வண்ணம் மெதுவாய்க்கூறிவிட்டு  , யாருடைய பதிலையும் எதிர்பாராமல் அவள் முன்னே சென்றாள் . படக்கென்று அவளின் கையைப்பிடித்து இழுத்தான் மதன் .அவனைப்பார்த்ததும் கோவத்தின் உச்சிக்கே சென்று அவன் கன்னத்தில் ‘பளார்’ரென்று ஒரு அறை விட்டாள் . அவள் கை அவன் கன்னத்தைத்தொடும் தருணத்தில் அவளை கிராஸ் செய்து ஒரு பஸ் சென்றது . அப்போதுதான் அவள் உணர்ந்திருந்தாள் . மதன் இவளை கலாய்த்ததும் கோபத்தில் அவளின் இடப்புறம் ஹார்ன் அடித்துக்கொண்டே வந்த பஸ்சைக்கூட கவனிக்காமல் முன்னேறியிருந்தாள் . அவளை அடித்துத்தூக்க வேகவேகமாய் வந்த பஸ்ஸை கன்ட்ரோல் செய்ய உள்ளே ட்ரைவர் தடுமாறிக்கொண்டிருந்தார் .அந்நேரத்தில் மதன் உள்ளே புகுந்து அவள் கையைப்பிடித்து இழுத்து அவளைக்காப்பாற்றினான் .

 

அவள் அடித்ததைப்பார்த்ததும் அங்கிருந்த சிலர் மதனை கொலைக்குற்றாவாளியைப்பார்ப்பதைப்போல் பார்த்தனர் . அங்கு நடக்கவிருந்த விபத்தை அறியாதவர்கள் , அவனை பொம்பளைப்பொறுக்கி , திருட்டு நாய் என்று வாய்க்கு வந்தவாறு திட்ட , அவமானத்தால் கூனிக்குறுகினான் . இனியும் அங்கிருப்பது , நரகத்தில் இருப்பதற்கு சமம் என்றுணர்ந்தவன் அங்கிருந்து அடுத்தநொடியே காலிசெய்தான் . அவமானப்பட்டவனுக்கு கிங்ஸ் ஆறுதலை அளிக்கமுயற்சித்துக்கொண்டிருந்தது . கண்ணனும் ஆறுதலாய் அவனுடனிருந்தான் . அரைமணிநேரம் அப்படியே கழிந்தது . அஞ்சேகால் பேருந்து கிளம்பி கால்மணிநேரம் ஆகியிருக்கும் . மீண்டும் பேருந்துநிலையத்திற்குச்சென்றான் . அடுத்தபஸ் கிளம்பிக்கொண்டிருந்தது .கூட்டமாய் இருந்ததால் தன் கையில் இருக்கும் நோட்டுகளை படிக்கட்டின் முன்னிருக்கும் சீட்டில் இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு , படியில் தொங்கியவாறு தன் பயணத்தைத்துவங்கியிருந்தான் . கால்மணிநேரப்பயணம் ரோட்டில் புழுதிவீசிக்கொண்டே நன்றாக சென்றுகொண்டிருக்கும்போது , திடீரென பஸ் ஓரமாகச்செல்ல , அங்கிருந்த கருவேலமரத்தின் முட்கள் பஸ்ஸை அரக்கியது . மதன் படிக்கட்டிலிருந்து உள்ளே நுழைய முயற்சித்துக்கொண்டிருக்க

‘மதன் பாத்து  ! முள்ளு பட்ரப்போவுது’ என்று கிரங்கடிக்கும் பெண் குரல் ஒலித்தது . அந்த குரலில் பச்சாதாபமும் பாசமும் ஒருசேரசேர்ந்து ஒலித்தது .அந்த குரலுக்கு சொந்தக்காரி மையல்தான் என்று சொல்லவேண்டுமா ? குரல்வந்த திசையைப்பார்த்தவன் , திகைத்தான் . தனக்காக அவள் ஒரு பஸ்ஸை தவறவிட்டு அடுத்த பஸ்ஸில் காத்திருக்கிறாள் என்ற நினைப்பே அவனுக்குள் போதையை உண்டாக்கியிருக்கவேண்டும் . அவ்வளவுநேரம் மனதில் இருந்த இறுக்கமான விஷயங்கள் மாறி சுமூகமான சூழலுக்கு மனம் சென்றது . அதுவரை புழுதியாய் இருந்த பயணம் , பூக்களாய் மாறியிருந்தது . கூட்டத்தை விலக்கியவாறே உள்ளே நுழைந்து மையலின் சீட்டருகே வந்துநின்றான் . மாலினி அவனைப்பார்த்து மெல்ல சிரித்தாள் . மையலோ , அவன்முகத்தைப்பார்க்க தடுமாறினாள் .

 

‘சாரி மையல்விழி ’ என்ற மதனின் குரல்வந்த திசையினை நோக்கி நிமிர்ந்தாள் .

 

‘எதுக்கு சாரி ?’

 

‘நேத்து உன்ன திட்டுனதுக்கு .இன்னைக்கு உன்கிட்ட அப்படி பிகேவ் பண்ணதுக்கு . ’

 

‘இல்ல . நாந்தான் சாரி . நேத்து உங்கள அண்ணானு கூப்டதுக்கு . அப்றம் இன்னைக்கு அடிச்சதுக்கு . ’ என்று எதிர்சீட்டை நோக்கியபடி அவனிடம் கூறினாள் .

 

‘பரவாயில்ல அம்மு’ என்றான் மதன் . அதைக்கேட்டதும் நிமிர்ந்து பார்க்காமல் கண்ணை மட்டும் மேலே உருட்டி , ஒரு காந்த பார்வையை வீசினாள் . அந்த பார்வையின் அர்த்தம் அவனுக்கு மட்டும்தான் புரியும் . நா உன்னோட அம்முவா ? என்று கேட்பது போலவும் போய் அந்த கத்ரினாவையே கூப்டவேண்டியதுதான ? என்ற ஆதங்கமான கேள்வியும் விழியின்வழி வினா எழுப்பினாள் .

 

‘என்ன அம்முனு கூப்டாதிங்க ’ என்றாள் தீர்மானமாக .

 

‘இல்லப்பா ! உன்பேரு ரொம்ப லென்த்தா இருக்கு . சோ நா இப்படியே கூப்டறேன் . ’

 

‘பரவால்ல . லென்த்தா இருந்தாலும் பேர் சொல்லியே கூப்டுங்க . ’

 

‘ஓ.கே . அப்றம் நம்ம மேரேஜ்கு பின்னாடியும் நா உன்னோட பேர்சொல்லிதான் கூப்டுவேன் . தங்கம் , பவுனு , செல்லம்னுலாம் கூப்டமாட்டேன் பரவாயில்லையா ?’

 

‘ம் பரவாயல்லை ’ என்றவள் அடடா ! அவசரப்பட்டு பரவாயில்லை என்றுகூறிவிட்டோமே என்றுணர்ந்து கண்ணை ஒருநொடி மூடி பல்லைக் கடித்து பின் கேட்டாள் .

 

‘என்ன சொன்னிங்க ?’

 

‘நா ஒன்னும் சொல்லலையே !’

 

‘ம் . இந்த மாதிரி எண்ணத்தோட எங்கிட்ட பழகாதிங்க . நாம ரெண்டுபேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம் .’

 

‘ம் . சரி ’

 

‘ஒருவேள நீங்க எங்கிட்ட ப்ரபோஸ் பண்ணா , நா உங்க கிட்ட பேசமாட்டேன் .’

 

‘ம் . சரி .’ என்றவாறு அவளைப்பார்த்துக்கொண்டே இருந்தான் . மாலினியைத்தவிர பிற தோழிகள் 5.15 பஸ்ஸிற்கே சென்றுவிட்டதால் , மாலினி மாத்திரம் இவளுடன் இருந்தாள் . மதனிடம் மையல் பேச ஆரம்பித்த நிமிடங்களிலிருந்து சிறிது நேரம் அநாதையாக்கப்பட்டிருந்தாள் . அதன்பின் மௌனமாக நேரங்கள் உருண்டோட , மதனின் ஊர் அருகில் பேருந்து நெருங்கியது . ஓரளவு கூட்டமும் பஸ்ஸினுள் குறைந்தது . மதன் , மையலின் அருகினில் நெருங்கி , அவளிடமிருந்த தன்னுடைய நோட்டுகளை வாங்கினான் . ‘பை பை’ சொன்ன மாலினியிடம் திருப்பி ஒரு பை சொல்லிவிட்டு படிக்கட்டினருகில் சென்றான் . முன்னால் வாயிலில்முதல் சீட்டிலேயே மாலினியும் , மையில்விழியும் அமர்ந்திருந்தபடியால் படிக்கட்டில் நின்ற மதனைக்கவனித்தபடியே இருந்தனர் . கண்டக்டர் விசிலடிக்கும் தருவாயில் மதன் , மையலிடம்

 

‘அம்மு ’ என்றான் . கோவமாய்ப்பார்த்த அவளின்விழிகளைப்பொருட்படுத்தாமல்

 

‘ஐ லவ் யூ’ என்றான் .

 

அவளின் கண்கள் ஆச்சரியத்தால் விரிய ‘ என்ன ?’ என்று கொஞ்சம் சத்தமாகவே அவள் கேட்டாள் .

 

‘ஐ லவ் யூ சோ மச் இன் த வேர்ல்ட் ’ என்றவாறே படிக்கட்டில் இருந்து ஓடி இறங்கினான் . பஸ் ஒரு பத்துஅடி தள்ளி நின்றது . இவன் இறங்கியவாறே அவள் இருந்த திசையைப்பார்த்துக்கொண்டிருந்தான் . பஸ் பத்துவிநாடிகளில் கண்டக்டரின் விசிலுக்கு கட்டுப்பட்டு கிளம்ப , அந்நேரத்தில் ஜன்னலில் வழி , இரு அகன்ற விழி தென்பட்டன . அவ்விழிகள் ‘இரு இரு நாளைக்கு உன்ன பாத்துக்கறேன் ’ என்று செல்லமாய் மிரட்டியது . அந்த விழிகள் , மதனுக்குச்சொந்தமாகும் மையல்விழியின் காந்தவிழிகள் .

 

License

காதல் காதல் - குறுநாவல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.