5 ஐ லவ் யூ டி

 

காத்திருப்பு என்பது ஒருசில நேரங்களில் இனிமையாகவும் , பல நேரங்களில் கடினமாகவும் இருக்கும் . ஆனால் மொத்தமாக ,  காத்திருக்கும் ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாகவே இருக்கும் . அதுவும் காதலில் விழுந்தவர்களின் காத்திருப்பு என்பது அனல்மேல் துடிக்கும் புழுவைப்போல் தான் .விட்டில் பூச்சி ஒளியைத்தேடுவதுபோல் , இங்கு ஒரு கன்னியின் விழிகள் தன் காதலனைத்தேடிக்கொண்டிருக்கிறது . நேரம் ஆக ஆக அவள் இருதயம் துடிக்கும் வேகமும் அதிகரித்தது . எல்லாம் இந்த மாலினியால்தான் . அவள் மட்டும் இவ்விஷயத்தை மதனிடம் சொல்லாமல் இருந்திருந்தால் தனக்கு இந்நிலையே வந்திருக்காது என்று மனதினுள் துடிதுடித்தாள் மையல் . போனவன் இன்னும் வரவில்லையே என்ற கவலையில் இவள் ஆழ்ந்திருக்க , கூட நிற்கும் தோழிகளோ நேரமாகிறது என்று கூப்பாடு போட ஆரம்பித்தார்கள் . மனதை பேருந்து நிலையத்திலேயே விட்டுவிட்டு  பேருந்தினுள் ஏறிச்சென்றாள் .

 

இந்த மதனைப்பார்த்த நாளில் இருந்து தனது தூக்கத்தைத்தொலைத்தவளுக்கு , பெரும்பாலான இரவுகள் துக்கத்தையே கொடுத்திருந்தது . இன்றைய இரவு நீண்டதொரு இரவாய் , பல யுகங்கள் கடப்பதுபோல கடந்தது . பூமியில் ஒருவேளை கருந்துளைகள் இருந்திருந்தால் , அன்றைய காலைப்பொழுதிற்கு டைம்ட்ராவல் செய்து மூர்க்கத்தனமாக மிரட்டிய அந்த கரியன் பயணித்த பேருந்தில் ஏறாமல் இருந்திருப்பாள் . அவன் மிரட்டியதைக்காட்டிலும் , மதன் அவனிடம் சண்டைக்குச்சென்றதே பெருங்கவலையாய் அவளை வாட்டியெடுத்தது . அடுத்தநாள்  விடிந்தது . கவலை இன்னும் தீர்ந்தபாடில்லை . மதனைப்பார்த்தால் மட்டுமே மனதை விட்டு அந்த கவலையின் ரேகைகள் ஓடும் . எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று அவனைப்பார்த்து நன்றாகத்திட்ட வேண்டும் என்று முடிவெடுத்தவாறே பேருந்தில் ஏறினாள்  . நேற்று மிரட்டியவன் இன்று இல்லை .ஏதோ பெரிதாய் நடந்திருக்கவேண்டும் . தோழிகளின் அரட்டை அன்று அவளை ஈர்க்கவில்லை .சில நிமிடங்களில் மதனின் பஸ் ஸ்டாப் வந்தது . அதோ ஏறுகிறான் . பொறுக்கி . தெருவில் போய் சண்டையிடும் பொறுக்கி என்றவாறு மனதினுள் நினைத்தாள் . வரட்டும் , கவனித்துக்கொள்ளலாம் என்றவாறே அவனைப்பார்த்துக்கொண்டிருந்தாள் . அவனுடைய கன்னம் லேசாய் சிவந்திருந்தது . இரண்டுவிரல்கள் பதிந்த அடையாளம் தெரிந்தது ., அவளுக்கோ கோவம் பீறிட்டது . இப்போது மாத்திரம் நேற்று மிரட்டியவன் இருந்திருந்தாள் , அவனை சட்டையைப்பிடித்து உலுக்கி காட்டில் வசிக்கும் காளியைப்போல் ருத்ரநடனம் ஆடியிருப்பாள் .

 

மதன் படிக்கட்டிலேயே இருந்தான் . உள்ளே வரவில்லை . அவன் வருவான் என்று ஏக்கப்பார்வை பார்த்தவளுக்கு பெரும் ஏமாற்றமாய் இருந்தது . நேரம் ஆக ஆக , பேருந்து நிலையத்துனுள் பேருந்து நுழைந்து தன் அப்போதைய பயணத்தை முடித்தது . மதன் வேகவேகமாய் இறங்கி அவன் கல்லூரிக்குச்செல்லும் பாதையினில் பயணிக்க ஆரம்பித்திருந்தான் . இவள் பேருந்து நின்றதும் அவன் சென்ற திசையினை நோக்கி பயணித்தாள் .

 

‘மதன்’ என்ற அவளின் குரல் கேட்டதும் சிலைபோல் அவன் நின்றான் . மெல்ல திரும்பியவன் ‘என்ன’ என்பது போல் பார்த்தான் .

 

‘நேத்து என்ன ஆச்சு ?’

 

‘ஒன்னுமில்ல . அந்த பையன பாத்து பேசுனேன். தட்ஸ் ஆல் ’

 

‘கன்னத்துல என்ன  ?’

 

‘அதுவா ! அவன் கொஞ்சம் ஓவரா சீன் போட்டான் . பேசிட்ருக்கும்போதே கை வச்சான் . அப்பறம் நானும் கைவச்சேன் . சண்ட பெருசாயிடுச்சி . கடைசில அவன் ஓடிட்டான் . இனிமேல் உன் பக்கம் அவன் வரமாட்டான்  .’ என்று சொல்லிவிட்டு அவன் நேராய் கிளம்பினான் .

 

அவனைத்திட்ட வாயெடுத்தவள் அவன் செல்வதைப்பார்த்ததும் கடுப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள் . கோவமாய்த்திரும்பி தனக்காக காத்திருக்கும் தோழிகளை மதிக்காமல் அவர்களைக்கடந்து அவள் நேராய் கல்லூரி சென்றடைந்தாள் .

 

‘தேவி ! நீ சொன்னமாதிரியே அவ பஸ் ஸ்டான்ட்ல பேசுனா . மேடம் செம கோவத்துல இருந்தாங்க . நேத்து நைட் நீ சொன்னமாதிரியே , நடந்தத சொல்லிட்டு ஓடிவந்துட்டேன் . அங்க மட்டும் நின்னுருந்தா , அவ என்ன திட்டிதீத்துருப்பா . அப்பா ! அவ்வளவு கோவம் அவளுக்கு வரும்னு நா நினச்சுக்கூட பாக்கல . பஸ்ல வரும்போது அவள பாக்கனுமே ! நானே பயந்துட்டேன்டீ ’ என்றவாறு தேவியிடம் தெரிவித்தான் . நேற்றைய சண்டை முடிந்தபின் தேவியிடம் இதைப்பற்றி பேசியிருந்தான் . அவள்தான் இன்று அவளை கண்டுகொள்ளாதே ! அவளுக்கு உன்மேல் இருக்கும் ஈர்ப்பு , பயங்கர கோபத்தை உண்டாக்கியிருக்கும் என்றவாறெல்லாம் தெரிவித்திருந்தாள் . அன்றைய மாலை பேருந்தில் மையலின் அருகே நின்று கொண்டிருந்தான் . அவளின் கோவம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்து காதல் மிகுந்திருப்பதை கண்ணால் கண்டான் .

 

‘எதுக்கு நீ பொறுக்கி மாதிரி சண்டைக்கு போன ?’

 

‘அவன் உன்ன திட்டிட்டான் . அதான் ’

 

‘ஓ ! திட்டுனா சண்டைக்கு போவிங்களா ?’

 

‘ஆமா !’

 

‘நீ கூடத்தான் முதல்நாளே என்ன திட்டுன ’ என்று அவள் கூறிமுடிக்கும்போது , மதனின் முழுக்கை சட்டையை மடித்தான் . அவனின்  முழுங்கைக்கு அருகில் சிகரெட்டால் உண்டாகியிருந்த காயம் தெரிந்தது .

 

‘ஹேய் ! என்னடா ஆச்சு ?’

 

‘அன்னைக்கு உன்ன திட்டுனப்போ மனசு கேட்காம , நானே சூடு வச்சிகிட்டேன் .’

 

‘லூசாடா நீ ! அறிவில்ல உனக்கு …’ என்று திட்டிக்கொண்டே இருந்தாள் . அவள் திட்டிமுடிக்கவும் அவன் ஊரைப்பேருந்து நெருங்கவும் சரியாய் இருந்தது . அவளிடம் ஒரு பேப்பரை நீட்டினான் .

‘என்ன இது ? லவ் லெட்டரா ?’ என்று சிறிய கோவப்பார்வை பார்த்தாள் .

 

‘அதெல்லாம் இல்ல . என்னோட போன் நம்பர் . ’

 

‘எதுக்கு எங்கிட்ட கொடுக்கற ?’

 

‘உங்கிட்ட பேசலாம்னு தான் .’

 

‘எங்கிட்ட மொபைல் இல்ல .’

 

‘இந்த காலத்துப்பொண்ணுங்க கிட்ட வெட்கம்கூட இல்லாம இருக்கும் . மொபைல் இல்லாம இருக்காது .’

 

‘எங்கிட்ட போன் இல்லடா . அதுவுமில்லாம எங்கிட்ட ப்ரபோசல் பண்ணக்கூடாதுனு நா உங்கிட்ட ஆல்ரெடி சொல்லிருக்கேன் . அப்படி ஏதாச்சும் நீ ட்ரை பண்ண , உன்னவிட்டு போய்டுவேன்னும் சொல்லிருக்கேன் . இதுக்குமேல உன் இஷ்டம் ’ என்றாள் . அவளின் பேச்சுகளை காதில் போட்டுக்கொள்ளாமல் பேருந்தில் இருந்து இறங்கினான் . உண்மையாகவே அவளிடம் போன்  இல்லையோ ? நாம் புதிதாய் ஒரு போன் வாங்கிக்கொடுத்துவிடவேண்டியதுதான் . அடடா ? போன் வாங்க  காசு ? சரி அதான் ஸ்காலர்ஷிப் பணம் வருமே! என்றவாறே வீட்டினுள் நுழைந்தான் . இரவெல்லாம் அவள் அவனைப்பொறுக்கி என்று செல்லமாய்த்திட்டியதே ஞாபகம் வந்தது . உருண்டு புரண்டு படுக்க முயற்சித்தவனை தொல்லை செய்வதற்கென்றே போன் வந்தது . கண்ணன் தான் லைனில் .

 

‘சொல்லு மச்சி .’

 

‘மச்சி ! நாளைக்கு காலேஜ் போலாமா இல்ல கட் அடிக்கலாமா ?’

 

‘அத காலைல முடிவு பண்ணிக்கலாம் மச்சி’ என்றவாறு போனை கட் செய்தான் .  உடனே புது எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது .

 

‘ஹலோ ’ என்றவனுக்கு ஒரு பெண்குரல் கேட்டது .

 

‘உங்க நம்பர் ஒரு போட்டியில வின் பண்ணிருக்கு . கோவா போற சான்ஸ் கிடைச்சிருக்கு மிஸ்டர் மதன் ’ என்று அவள் சொல்ல , கடுப்பாகி போனை அணைத்தான் .  மீண்டும் ஒரு அழைப்பு வர அட்டன்ட் செய்தான் .

 

‘ஹே ! நா மையல் பேசுறேன் . இதுதான் என்னோட நம்பர் . திருப்பி கால் , மெசேஜ் எதுவும் பண்ணிடாத . பை ’ என்றவாறு வேகவேகமாக கூறிவிட்டு போனை கட் செய்தாள் . உடனே அவளின் நம்பருக்கு போன் செய்தான் . கடைசி ரிங்  அடித்தபின்பு அவள் போன் எடுத்தாள் .

 

‘ஹேய் ! நான்தான் சொல்லிருந்தேன்ல . எதுக்கு கால் பண்ண ?’

செல்லமாக கோவித்தபடி , சிணுங்கியவாறே பேசினாள் .

 

‘ஏன்டி ? போன் பண்ணாதனு சொல்றதுக்கு யாராச்சும் போன் பண்ணுவாங்களா ? ’

 

‘சரி . சரி . ஏதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லு . நா படிக்க போகனும் ’

 

‘ஐ லவ் யூ டி .’

License

காதல் காதல் - குறுநாவல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.