7 பிடிக்கல

 

‘எங்கப்பாவுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சி மதன் ’ என்று கண்கலங்கியவாறே மதனிடம் மையல் கூறினாள் . எவ்வளவோ இனிமையான நினைவுகளை அவர்களுக்குத்தந்த அந்த பேருந்து பயணம் இன்று கொடுமையானதாக இருந்தது . நியூட்டனின் மூன்றாம் விதி இவ்வளவு சீக்கிரமாக இவர்களின் வாழ்க்கையில் அப்ளை ஆகும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் .

 

‘எப்படி தெரிஞ்சது ?’

 

இடைப்பட்ட காலங்களில் இவர்களின் காதலுக்குள் பிரிவினை ஏற்படுத்த ஒருவன் உள்நுழைந்தான் . அவன் மையலின் தூரத்து உறவினன் . பார்க்க  போந்தாக்கோழி போல் இருக்கும் அவன் மையலுக்கேத்தெரியாமல் அவளை கபளிகரம் செய்ய முயற்சித்தான் . மதனின் கெத்தும் , நண்பர்கள் செட்டையும் பார்த்து மிரட்சியுடன் ஒதுங்கி நின்றான் . தினந்தோறும் மையலின் அருகில் அமர்ந்து வேறு சாதியைச்சார்ந்த மதன் , அவள் கையைப்பிடிப்பது இவனுக்கு அருவெருப்பை உண்டாக்கியிருந்தது .  மதனிடம் மையல் சிரித்து பேசும்போதெல்லாம் இவனுக்கு நரம்புகள் புடைக்கும் . அவனின் கோவத்தை நேரடியாகக்காட்டாவோ , மையலைக்கண்டிக்கவோ போதுமான தைரியம் இல்லாதவன் . அவனுக்கு மையல் வேண்டும் . அவ்வளவே அவன் எண்ணம் . அதற்காக குறுக்கவழியைக்கண்டறிந்து அதன்படி சென்றான் .மையலின் வீட்டில் சொல்லிவிட்டான் .

 

‘யாரோ எங்க வீட்டுல சொல்லிட்டாங்க .’ என்று அழுதவாறே கூறினாள் .

 

‘அம்மு . அழாத ! இப்போ என்ன ? உங்க வீட்ல தெரிஞ்சிடுச்சி . அவ்ளோதான . நா உங்க வீட்டுல வந்து பேசறேன் .’

 

‘அதெல்லாம் வேண்டாம் . என்ன இன்னைக்கே எங்கயாவது கூட்டிட்டு போய்டு . ப்ளீஸ் .’ என்று மீண்டும் அழுதாள் .

 

‘ஹே ! லூசாடி நீ . நா இன்னும் காலேஜ் முடிக்கல . அதுவுமில்லாம என்ன பெத்த பையனவிட பாத்துப்பாத்து என்னோட அங்குள் வளர்த்திருக்காரு . அட்லீஸ்ட் அவருகிட்டயாச்சும் ஒரு வார்த்தை சொல்லனும் .’

 

‘எனக்கு பயமா இருக்குடா . ப்ளீஸ் . என்ன விட்டுட்டு போய்டாத டா .’

 

‘ஒருநிமிஷம் பொறுமையா யோசிச்சு பாரு அம்மு . நா உன்ன கல்யாணம் பண்ணி ராணிமாதிரி வச்சி்க்காப்பாத்தனும்னு நினைக்கிறேன் .  இப்போ இருக்க நிலைமைல எப்டிடி ? நா ஆல்ரெடி சொல்லிருக்கேன்ல . உங்க வீட்ல உன்னப் பாத்துக்கரத விட நல்லா உன்னப்பாத்துக்கனும் . அதுதான் எனக்கு முக்கியம் .கொஞ்சம் பொறுமையா இரு தங்கம் . ’ என்று ஒருமாதிரியாக சமாதானப்படுத்தினான் . அவனின் ஆறுதலான வார்த்தைகள் மனதின் காயத்திற்கு ஒத்தடம் கொடுத்தது போலிருந்தது .

வீட்டிற்கு வந்தவன் சிறிது நேரம் யோசித்தான் . இதன்பின்னும் பொறுத்திருப்பது ஆபத்து என்றுணர்ந்தான் . அவன் அங்கிளிடம் எல்லா உண்மையைப்பற்றியும் உடைத்தாகவேண்டிய கட்டாயத்திற்குத்தள்ளப்பட்டான் . அவருக்காக காத்திருந்தான் . சப்-இன்ஸ்பெக்டரான அவருக்கு எப்போது வேலை முடியும் , எப்போது வீடுதிரும்புவார் என்பது கேள்விக்குறியே . ஆனால் அவனுடைய நேரத்திற்கு அன்று சீக்கரமாகவே வீட்டிற்குள் நுழைந்தார் . மனதைத்தைரியப்படுத்தியவாறே அவரிடம் சென்றான் .

 

‘அங்குள் ’

 

‘ம் ’

 

‘உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் ’ என்றவனை நிமிர்ந்து பார்த்தார் . அவரின் முகம் என்ன என்று வினவியது .

 

‘நா ஒரு பொண்ண மூனு வருஷமா லவ் பன்றேன் .’

 

என்னது மூனு வருஷமா என்பது போல் அவருடைய முகம் ஆச்சரியமானது .

 

‘அதுக்கு ?’

 

‘அவங்க வீட்ல தெரிஞ்சிடுச்சி . ’

 

அவர் அவனின் கண்களை கூர்மையாய் நோட்டம் விட்டவாறே கேட்டார் .

 

‘அவள கல்யாணம் பண்ணிக்கனுமா ?’

 

இவன் தலைகுனிந்தவாறே நின்றுகொண்டிருந்தான் .

 

‘உன் வயசு என்ன ? என்ன வேலைக்கு போற ? ஒருபடி பொன்னி அரிசி விலை என்னன்னு தெரியுமா ?’

என்ற அவரின் கேள்விகளுக்கு பதில் கூறாமல் நின்றிருந்தான் . அவனுக்கு பொன்னி அரிசியைப்பற்றிய கவலை இல்லை . உள்ளுக்குள் தன் காதல் இளவரசியைப்பற்றிதான் கவலை .

 

‘பொண்ணு என்ன ஜாதி ?’

 

‘******* அங்குள் .’

 

‘செட் ஆகாது . விட்ரு .’

 

‘அங்குள் ’ என்று ஏமாற்றத்துடன் அவரைப்பார்த்தான் . அவனின் கண்களில் பிச்சைக்கேட்பவனின் ஒளி தெரிந்தது . அவரோ அவனைக்கவனிக்காமல் எழுந்து சென்று பீரோவைத்திறந்து சில பைல்களை கொண்டுவந்தார் .

 

‘மீறி கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சினா இங்க இருக்கமுடியாது . உங்க அப்பனோட இன்சூரன்ஸ் பணம் , உன் பேர்ல வாங்கி வச்சிருக்க நிலம் பத்தின எல்லா பைலும் இதுல இருக்கு . எடுத்துகிட்டு கிளம்பிடு .’ என்று குரல் தழுதழுத்தவாறே கூறினார் .  அவனை எப்படியாவது நல்ல நிலைமைக்குக்கொண்டு வந்து சேர்த்துவிடவேண்டும் என்று வாழ்க்கைமுழுமைக்கும் போராடிக்கொண்டிரு்ககும் ஜீவனின் கண்கள் கலங்கியிருந்தது . அவன் தம் அடிக்கிறான் எனத்தெரிந்திருந்தாலும் அதை அவனிடம் அதைப்பற்றி நேருக்குநேர் ஒருமுறைக்கூட பேசியதில்லை . ஒரே ஒரு தடவை குடித்துவிட்டு வந்தவனிடம் ‘உங்கப்பன மாதிரி நீயும் ஆகிடாதடா ’ என்று கெஞ்சியவர் . அன்றிலிருந்து குடிப்பதை நிறுத்தியவன் . இன்றோ , அவனை தராசுபோல் மாற்றிவிட்டார் .ஒருபக்கம் தன்னையே நம்பி காத்திருக்கும் மையல் , இன்னொருபுறம் தனக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த மாமன் .

 

மதன் அதற்கடுத்து எதுவும் பேசவில்லை . அவனுக்கு நன்றாய்த்தெரியும் . அவனுடைய வீட்டில் ஜாதிப்பிரச்சனை பெரிதளவில் இருக்குமென்பது நன்றாய் தெரியும் . அவ்வளவு ஏன் , அவனே நண்பர்களைக்கூட ஜாதிவாரியாகத்தான் பிரித்து வைத்திருந்தான் . காதலிக்கும்போது கூட அடிக்கடி மையலின் ஜாதியைக்கிண்டலடிக்காமல் இருக்கமாட்டான் . அவளும் இவனைப்போல் ஜாதி பார்த்திருந்தால் , இவர்களின் காதல் அப்போதே முடிந்திருக்கும் .  இனி யோசிக்க ஒன்றுமில்லை . கடைசியாய் ஒருமுறை மையலின் வீட்டில் மோதிப்பார்த்துவிட வேண்டியதுதான் என்றவாறு அவளின் வீடு நோக்கி தன் பைக்கை கிளப்பினான் .

 

கிளம்பும்முன் கண்ணனுக்கு போன் செய்து மையலின் வீட்டினருகே இருக்கும் டீக்கடைக்கு வருமாறு கூறியிருந்தான் . அவளின் வீடுநோக்கி செல்லும்போதெல்லாம் எதிர்காலத்தைப்பற்றிய பயத்துடன் தானிருந்தான் . அவனுடைய மாமாவிற்கு ஜாதியைக்காட்டிலும் அவனே முக்கியம் . இருந்தாலும் அவனுடைய கிராமம் முழுமையும் அவருக்கு அங்காளி , பங்காளி , மாமன் , மச்சான் உறவினராகவே இருந்தனர் . இவன் வேற்றுசாதிப்பெண்ணைத்திருமணம் செய்துவிட்டான் என்று அவர்கள் அறிந்தால் ஊருக்குள் தலைநிமிர்ந்து எங்கும் செல்லமுடியாது . தான் அவமானப்படுவதோடு மட்டுமில்லாமல் ‘தங்கை மகனை ஊர்ப்பொறுக்க வைத்துவிட்டான் . வளர்ப்பின் லட்சணம் இதுதானா ?’ என்று ஊரே அவமானப்படுத்தும் . தன் மகளுக்கு நாளை வரன்தேடினாலும் இந்த பிரச்சனை குறுக்கில் வரும் . இவனைக்காட்டிலும் இக்கட்டான சூழலுக்கு அவர்தான் தள்ளப்பட்டார் .

 

மதன் அவளின் வீட்டை அடைந்தான் . கண்ணனிடம் வெளியில் காத்திருக்குமாறு கூறிவிட்டு அவளின் வீட்டிற்கு சென்று காலிங்பெல்லை அடித்தான் . அவனுடைய அம்முவின் தங்கைதான் கதவைத்திறந்தாள் . அவள் மதனைப்பார்த்ததும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தாள் .

 

‘அச்சோ ! இங்க எதுக்கு வந்திங்க ? ஏற்கனவே நிறைய பிரச்சன ஓடுது .அப்பா வேற வீட்டுல இருக்காரு . தயவு செஞ்சு கிளம்புங்க ’ என்று அவள் கூறும்முன்பாக  அவளின் தந்தையின் குரல் வந்தது .

 

‘யாரும்மா ?’

 

‘யாருனு தெரிலப்பா  . ’ என்றவாறு அவள் கதவைவிட்டு வேகமாக அக்காவின் அறைக்கு ஓடினாள் . மதனைப்போலவே அவர்களும் நடுத்தட்டு வர்க்கம்தான் என்பது அவர்களின் வீட்டின் பெயிண்டின்வாயிலாகவே அறியமுடிந்தது .

 

‘யாருப்பா நீங்க ?’

 

‘சார் . நா உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் .’

 

‘உள்ள வாங்க ’ என்று அழைத்தவர் அவனை அமர சொன்னார் .

 

‘சொல்லுப்பா .’

 

‘சார் . எம்பேரு மதன் . ’ என்றவுடன் அவருடைய கண்கள் விரிந்தது . அவருடைய முகம் மாறியது நன்றாகவே தெரிந்தது .

 

‘நானும் உங்க பொண்ணும் லவ் பன்றோம் .’ என்று தட்டுத்தடுமாறி கூறிமுடித்தான் .

 

மையலின் தந்தை எதுவும் பேசவில்லை . அவளின் தாயோ ஒரு ஓரமாய் நின்று இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் .

 

‘அம்மா . இங்க கொஞ்சம் வாம்மா ’ என்று சத்தமாக யாரையோ அழைத்தார் . அதுவரை கதவருகில் நின்று நடப்பதை படபடப்புடன் பார்த்துக்கொண்டிருந்த மையல் அவரின் அருகில் வந்து நின்றாள் .

 

‘இந்த பையன நீ லவ் பன்றியாமா ?’ என்றார் அழுத்தமாக .

 

அவள் தொடர்ந்து மௌனம் சாதித்தாள் .

 

‘சரி தம்பி . நீங்க உங்க வீட்டுல இருக்கவங்கள வர சொல்லி பொண்ணு கேளுங்க . எனக்குப்பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம் .’ என்றவாறு அவர் எழுந்து நின்றார் .

 

‘சார் . எங்க வீட்ல ….’

 

‘என்னப்பா ?’

 

‘எங்க வீட்டுல ஜாதி மாத்தி கல்யாணம் பன்றத ஏத்துக்க மாட்டாங்க சார் . ’

 

‘அப்றம் எப்டிப்பா ?என்ன பாத்தா மட்டும் இளிச்சவாயன் மாதிரி தெரியுதா ? சரி நீ வேல செய்ற ?’

 

‘படிச்சிட்ருக்கேன் சார் .பி.இ. பைனல் இயர் .’

 

‘ஓ ! நல்ல படிப்பு தான் . இவளுக்கும் இன்னும் 6 மாசம் இருக்கு படிப்பு முடிய . அதுக்குள்ள நீ உங்க வீட்ல பேசி அவங்க மனச மாத்து . அதுக்கப்றம் பாத்துக்கலாம் . ’ என்றவாறு அவனின் பதிலை எதிர்பாராமல் கிளம்பி உள்ளே சென்றார் . வந்த காரியம் ஓரளவு சக்ஸஸ் ஆனது மதனுக்கு சந்தோஷமாய்த்தானிருந்தது . எப்படியாவது அவன் வீட்டில் மட்டும் மனமாறம் செய்யவேண்டும் . கண்ணனிடம் நடந்ததைக்கூறிவிட்டு , ஓரளவு தெளிந்த மனதுடன் தன் வீட்டை அடைந்தான் . அவனுடைய மாமா ஒருமாதிரியாக அவனைப்பார்த்தாலும் ஏதும் சொல்லவில்லை . காலையில் வழக்கம்போல பேருந்தில் அவளைச்சந்தித்தான் .  சந்தோஷ ரேகை அவனுடைய முகத்தில் மின்ன , அவளைத்தேடினான் . ஆனால் அவளோ இவனை்ககண்டும் காணதது போல் இருந்தாள் . அவளிடம் சென்று ஆசையாக இவன் பேச , அவள் பதிலேதும் சொல்லாமல் விரைத்தவாறு நின்றிருந்தாள் . மாலினியும் அதேபோலவே தான் இருந்தாள் . இவர்களிருவருக்கும் நடக்கும் சண்டையை தீர்த்துவைப்பவளே  அமைதியாய் இருந்தாள் . என்ன நடக்கிறதென்று புரியாமல் இருந்தான் . மாலையிலும் அதேநிலை தான் . ஓரளவு கெஞ்சிப்பார்த்தவன் , கடைசியில் மையலிடம் கோவப்பட்டு கேட்டான் .

 

‘ஹே ஏன்டி பேசமாட்டேன்ற ?’

அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்தவள் பொறுமையாய் தெளிவாய்க்கூறினாள் .

 

‘எனக்கு உன்ன பிடிக்கல . இனிமேல் எங்கிட்ட பேசாத . என்ன தயவு செஞ்சு டிஸ்டர்ப் பண்ணாத .’

License

காதல் காதல் - குறுநாவல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.