8 காதல்

 

 

அவள் எதற்காக கோவப்படுகிறாள் என்பது புரியாமல் குழம்பிய மதன் , ஏதேதோ முயற்சி செய்தும் அவளிடமிருக்கும் காரணத்தைக் கண்டறியமுடியவில்லை . இப்படியே இரு நாட்கள் முடிந்தது . அவள் கல்லூரியே கதி என்றிருந்தான் இன்றைய தினம் அவளிடம் பேசி என்னவென்று அறிந்துகொள்ளவேண்டும் என்றவாறு முடிவெடுத்தவன் அவள் கல்லூரியை விட்டு வரும் வழியில் நின்றுகொண்டிருந்தான் . அவளும் வந்தாள் . அவள் கையைப்பிடித்து இழுத்து நிறுத்தினான் .

 

‘எங்கிட்ட ஏன் அம்மு பேசமாட்டேன்ற ?’ என்று குரல் தழுதழுத்தவாறே கேட்டான் . கண்கள் வழக்கம்போல கண்ணிருக்கு பழகியிருந்தது . காதலித்தால் அதிகம் சுரப்பது கண்ணிர் தான் . அவள் தலைகுனிந்தவாறே நின்றிருந்தாள் . அவளின் முகத்தைப்பிடித்து நிமிர்த்தினான் . அவளும் கண்ணிரை மறைக்கத்தான் தலைகுனிந்து நின்றிருந்தாள் . அவன் கண்களைப்பார்த்ததும் , அவளின் மனதினில் குடிகொண்டிருந்த சோகம் கண்களின் வழியே கண்ணீராக பீறிட்டது .

 

‘எங்கிட்ட எதுவும் கேட்காதடா. என்ன இப்பவே எங்கயாச்சும் கூட்டிட்டு போய்டு ’ என்று அழுதவாறே கூறினாள் .

 

‘நாம ஒன்னும் அனாத இல்லைடி . யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்க . அதான் உங்க வீட்டுல ஓ.கே சொல்லிட்டாங்கள .’ என்றான் . உண்மையில் மையலின் தந்தை , மதனை அனுப்பிவைத்தபின் மாலினியை அழைத்து பேசியிருந்தார் . அவளும் பயந்துகொண்டு மையலுக்கு மதனின்மேல் இருக்கும் காதல் பற்றியும் , இவர்களைப்பிரிக்க நினைத்தால் ஓடிச்சென்றாவது திருமணம் செய்துகொள்வார்கள் என்பதனையும் தெரிவித்திருக்கிறாள் . இனி இவர்களிருவரும் பேசுவதைக்கண்காணிக்கும் பணியை மாலினியிடம் ஒப்படைத்துவிட்டு , மையலுக்கு அன்று இரவே மாப்பிள்ளைத்தேடும் பணியைத்தொடங்கியிருந்தார் . மையலோ தந்தையிடம் புரியவைக்க முயற்சிக்க ,

 

‘உனக்குப்பின்னாடி இவ வாழ்க்கைய நீ நினைச்சிப்பாத்தியாமா ? . தயவு செஞ்சு என் குடும்ப மானத்த அழிச்சிடாதமா ’ என்று அழுதார் . அவளும் அழுதுகொண்டே அவளின் தந்தையின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டாள் . தன்னைப்பெற்றவருக்காக , தான் பெறாத தன் காதலனை கைவிட முயற்சித்தாள் . கையை மட்டும் பிடித்திருப்பவனாக இருந்தால் அவனை கைவிட்டிருக்கலாம் . ஆனால் அவளின் உயிரைப்பிடித்திருக்கும் மதனை எப்படி விட முடியும் ? இரண்டு நாட்களிலேயே அவளின் தந்தை பாசத்தை வென்றது அவளின் காதல் .

 

இப்போது மதனும் ஒருவாறு யோசித்தான் . இவளின் வீட்டில் ஏதோ பிரச்சனை என்பது மாத்திரம் புரிந்தது .

 

‘சரி  . கவலப்படாத அம்மு .நா பாத்துக்கறேன் ’ என்றவாறு அவளுடன் பேருந்து நிலையத்திற்கு கிளம்பினான் . இரண்டு நாட்களாய் துடிதுடித்துக்கொண்டிருந்தவன் இன்று ஆறுதலாய் இருந்தான் . மனதில் மாத்திரம் பயமும் , என்ன செய்யலாம் என்ற குழப்பமும் ஓடியது . பஸ் ஸ்டான்டில் காத்திருந்த கண்ணனிடம் கேட்டபின் ஒரு நல்ல யோசனை தோன்றியது . நாளை மறுநாள் நல்ல முகூர்த்த தினம் . அன்றைய காலைப்பொழுதில் ரிஜிஸ்டர் ஆபிஸ் அழைத்துச்சென்று அவளை மனம் புரிந்துகொள்ளலாம் . அதன்பின் அவள் வீட்டிலேயே அவள் இருக்கட்டும் . யார்வீட்டிலும் சொல்லவேண்டாம் . அடுத்தவாரம் வரவிருக்கும் கேம்பஸ் இன்டர்வியுவில் எப்படியாவது வேலையை வாங்கிவிட்டால் சாமாளித்துவிடலாம் என்று முடிவெடுத்தான் . அதை மையலிடமும் தெரிவித்தான் . மையல் ஓரளவு ஆறுதலடைந்தாள் . ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து இன்னொருத்தி பதறிக்கொண்டிருந்தாள் . இவர்களிருவருக்கும் மூன்று வருடமாய் இணைப்புப்பாலமாய் இருந்த மாலினி தான் . மையலின் தந்தை அன்றைய பொழுது இவளை மிரட்டியது இவளின் நினைவுக்கு வந்தது .

 

‘இங்க பாருமா . நீ செஞ்சத எல்லாம் உங்க வீட்டுல சொன்னா என்ன ஆகும்னு தெரியும் தான ?’ என்ற அவரின் குரல் அவளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது . ஒருவேளை அவளின் வீட்டில் இதெல்லாம் தெரிந்தால் அவளின் படிப்பு பாதியில் நின்றுவிடும் . அதன்பின் அடுத்த ஒரு மாதத்தில் அவளுக்கும் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடந்துவிடும் . அவளுக்கு அதில் துளிகூட உடன்பாடில்லை . அவள் வாழ்க்கையை நன்றாய் அனுபவிக்க நினைப்பவள் மாலினி .

 

அடுத்த இரு தினங்கள் மையல் அந்த பேருந்தில் வரவில்லை . அவளின் தோழிகளிடம் கேட்டபின் தான் தெரிந்தது , அவளின் தந்தையே கல்லூரிக்கு கொண்டுவந்துவிடுகிறார் என்று .எப்படியாவது அவளைப்பார்த்து பேசியாகவேண்டும் என்று அவளின் கல்லூரிக்குள் நுழைந்தான் . அவளின் வகுப்பறையின்வழியாக சைகை செய்து வெளியே வர சொன்னான் . அவளின் முகம் முற்றும் பொலிவிழந்து கிடந்தது . கணவனை இழந்த கைம்பெண் போல் காட்சியளித்தாள் .

 

‘என்ன ஆச்சு மையல் ?’

 

‘நமக்குள்ள செட் ஆகாது மதன் . நாம பிரிஞ்சிடலாம் .’

 

‘ஹேய் என்ன விளையாட்றியா ?’

 

 

‘ ப்ளீஸ் மதன் . ’ என்றாள் அழுதுகொண்டு . அவளின் அழும் முகத்தைப்பார்த்து அவனுக்கு கோவம் தான் வந்தது .

 

‘ஈஸியா வருதுனு உடனே அழ ஆரம்பிக்காத . எப்போப்பாரு அழுறது . இப்போ என்னடி உன் பிரச்சன . நா உன்ன விட்டு போகனுமா ?’

 

அவள் பதிலேதும் சொல்லவில்லை.  ஒருவாறு கோத்தைக்குறைத்தபடியே மென்மையாக அவளிடம் கூறினான் .

 

‘நா உங்கிட்ட ப்ராமிஸ் பண்ணத மறந்துட்டியா ? உன்ன விட்டு போற நாள் வந்துச்சுனா என் உயிர் என்ன விட்டு போய்டும் அம்மு .’

 

அவள் இன்னும் அதிகமாய் விசும்ப ஆரம்பித்தாள் .

‘எங்கப்பாவுக்கு இது பிடிக்கல ’

 

‘ உங்க அப்பன் பெரிய இவன் . அவனோட பாசம் உன்ன அப்படியே தடுக்குதா ?என்னோட அங்குளுக்குக்கூட தான் இது பிடிக்கல . அதுக்காக நா உன்ன விட்டுட்டேனா ?’

 

‘உனக்கு அப்பா இருந்தா தெரிஞ்சிருக்கும் ’ என்று யோசிக்காமல் கூறினாள் . அவனோ தலையில் இடி இறங்கியதைப்போல் சிலையாய் நின்றான் . தன்னை ஏறத்தாழ அநாதை என்று கூறிவிட்டாளே என்பதை அவனால் ஜீரனிக்கமுடியவில்லை . அம்மா இல்லாத குறைய தீர்த்தவள் , இன்று நீ ஒரு அநாதை என்று சொல்லாமல் சொல்லியது அவனுக்குள் பெரும் துக்கத்தை வார்த்தது . கண்களில் தன்னையும் அறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது .

 

‘சரி ! நா உன்ன விட்டுப்போறதுதான் உனக்கு சந்தோஷம்னா , உன் சந்தோஷத்துக்காக நா போறேன் ’ என்றவாறு அங்கிருந்து கிளம்பினான் . அவனுக்குள் விவரிக்கமுடியாத துயரம் தாண்டவமாடியது . அவனின் தாய் மட்டும் இருந்திருந்தால் , அவளின் மடியினில் முகம்புதைத்து அழுதுகொண்டே இருந்திருப்பான் . அந்நேரத்தில் கண்ணன் கூட அங்கில்லை .  திக்கற்ற வழியினில் மனம் முழுமையும் துயரத்தில் ஆழ்த்தி , கால் போனபோக்கில் பயணிக்க ஆரம்பித்தான் . என்ன பெண் இவள் ? ஒருநாள் வேண்டும் என்கிறாள் , இன்னொருநாள் வேண்டாம் என்கிறாள் . சுயமாய் முடிவெடுக்கத்தெரியாத முட்டாள் இனத்தைச்சார்ந்தவள் . இவள் படித்துக்கிழித்தால் மட்டும் போதுமா ? வாழ்க்கைச்சார்ந்த ஒரு முக்கியமான முடிவினைக்கூட எடுக்கத்துணிவில்லாத பேடி . என்று ஆள்மனது அவனுக்குள் அவனை சமாதானப்படுத்த முயன்று தோற்றது .

 

‘உனக்கு அப்பா இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும் ’ என்ற குரலே அவனுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது . பேருந்து நிலைத்தை அடைந்ததிலிருந்து எத்தனை சி்கரெட் அடித்திருப்பான் என்று சிகரெட்டுக்கேத்தெரியாது . அவன் மனதில் இருக்கும் துக்கத்தைத்தீர்க்க , நுரையீரலுக்குள் கார்பன் படிமத்தையும் பொலேனியம் 210 ஐயும் கிங்ஸின் வழியாக செலுத்திக்கொண்டிருந்தான் . அவனுக்கு அப்போது தனிமையின் துணை தேவைப்பட்டது .

 

கல்லூரியில் இருந்த மையலுக்கு நெருப்பின் மேல் அமர்ந்திருப்பது போல் இருந்தது . அவ்வார்த்தையைக்கூறியபின் அவனை விட அதிகமாய் துன்புற்றவள் அவள்தான் . சிங்கப்பூர் மாப்பிள்ளை என்று ஒருவனை அவர் கொண்டுவந்து நிறுத்தியிறா விட்டால் இவ்வளவு தூரம் ஆகியிருக்காது . அன்று அவளின் தந்தைக்கு எதிராய் பெரும்போரேத்தொடுத்திருந்தாள் .

 

‘எனக்கு மதன் போதும் பா . நீங்கள்லாம் வேண்டாம் . அவனவிட்டு என்னால இருக்கமுடியாது’ என்று தீர்மானமாய் கூறினாள் . அடிக்க வந்த அவளின் தாயின் கையினைத்தடுத்தாள் . அதுவரைப்பொறுமையாய் பார்த்துக்கொண்டிருந்த அவளின் தந்தை அப்படி மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் , இந்நேரம் மதனின் கையால் தாலிகட்டிக்கொண்டு எங்கேனும் சென்றிருப்பாள் .

 

‘இங்க பாருடி .நீ மட்டும் அந்த பள்ளிப்பையனோட ஓடிப்போன , நாங்கலாம் குடும்பத்தோட தற்கொலைப்பண்ணிப்போம் ’ என்றால் அவளின் தாய் .

 

‘நீங்க வாழ்ந்து என்ன பண்ண போறிங்க ? பெத்த பொண்ணோட மனசுல என்ன இருக்குனு தெரியாம  இருக்க நீங்கலாம் வாழ்ந்து என்னத்த சாதிக்கப்போறிங்க ?’

 

இவளைவிட்டாள் இன்றே கிளம்பிவிடுவாள் என்று முடிவெடுத்த அவளின் தந்தை , யாரும் செய்யாத காரியத்தைத்துணிந்து செய்தார் . எழுந்து வேகமாக மையலிடம் வந்தவர் , சிறிதும் யோசிக்காமல் அவள் காலில் விழுந்து அழ ஆரம்பித்தார் . அதுவரை அவள் மனதில் இருந்த திடம் , சுக்குநூறாய் உடைந்துபோனது .

 

5.15 பேருந்தில் வழக்கம்போல முன்வாயில் சீட்டில் அவள் கன்னங்கள் வீங்கி அமர்ந்திருந்தாள் . படிக்கட்டில் தொங்கியவாறு தன் பயணத்தைத்தொடர்ந்துகொண்டிருந்தான் மதன் . இருவருமே பேசிக்கொள்ளவில்லை . இன்னும் ஒரு நிமிடத்தில் மதனின் ஊர் வந்துவிடும் .

 

‘மதன்’ என்று அவளின் குரலுக்கு மெல்ல திரும்பினான் . கண்கள் சிவந்து , முகம் வெளிறிப்போயிருந்தான் .

 

‘எனக்கு யாரும் வேண்டாம் . நீ மட்டும் போதும் . இப்பவே என்ன எங்கயாவது கூட்டிட்டுப்போய்டு . ப்ளீஸ் ’  என்றாள் . அவள் முகம் கெஞ்சலின் உச்சத்தில் இருந்தது . அவன் மட்டும் சரி என்று சொன்னால் அப்போதே கிளம்பிவிடுவாள் . அவன் மௌனமாய் இருந்தான் . அருகில் மாலினியோ இன்று நடப்பதை வீட்டினுள் சொல்லக்காத்திருந்தாள் .

 

‘மதன்’ என்று மறுபடியும் அவள் அழைக்க திரும்பினான் . ஒருவாறு தீர்மானமாய் கூறினான் .

 

‘சாரி மையல் . எனக்கு என்னோட அங்குள் தான் முக்கியம் . அவரோட பெருமைய எனக்கு புரியவச்சதுக்கு தேங்ஸ் .’ என்று திரும்பினான் . அவள் கண்களில் நீர் ஓட ஆரம்பித்தது என்று சொல்லவா வேண்டும் . மதனின் ஊர் வந்துவிட்டது . பஸ் மெல்ல நிற்க ஆரம்பித்தது . மையல் அவனின் கைகளைப்பிடித்துக்கொண்டு கண்ணீரோடு இருந்தாள் . அவள் கிட்டத்தட்ட அவன் காலைப்பிடித்துக்கெஞ்சும் மனநிலையில் இருந்தாள் . அவனோ  தன் மனதில் இருக்கும் காதலை ஓரங்கட்டிவிட முயன்று கொண்டிருந்தான் . அவளே வருகிறாள் , பேசாமல் அவளோடு சென்றுவிடலாம் என்று மனம் ஒருபுறம் அலைபாய ஆரம்பித்தாலும் மறுபுறம் அவளின் தீச்சொற்களும் , முடிவெடுக்கத்தெரியாத சிந்தனையையும் நினைத்து பயந்தான் . கடைசியில் ஒருவாறாய் முடிவெடுத்து அவளின் உயிரை அவனின் கையிலிருந்து பிரித்துவிட்டான் .  உயிரற்ற பிணமாய் அவனுடைய ஊரில் இறங்கி முன்னே நடந்தான் . அவளின் சத்தமான அழுகுரல் பேருந்திலிருந்து வந்தது . இவனின் கண்களில் கண்ணீரும் மனதினுள் வலியும் ஒருசேர இருந்தது . பஸ் மெல்ல நகர்ந்தது .அவள் இவனைப்பார்த்து ‘மதன்’ என்று அழுதவாறே கத்திக்கொண்டு சென்றாள் . ஓடிப்போய் அவள் கண்களில் ஓடும் கண்ணீரைத்துடைக்க , இவனின் புலன்கள் துடிதுடித்தன .

 

 

*****

நான்கு வருடங்களுக்குப்பிறகு ,

 

‘செமயா படம் போகுதுல்ல ?’ என்றான் பிரபு .

 

‘ஆமா டூட் ’ என்று பதில் கூறியவனின் குரல் மதனுடையதுதான் . பிரபு , மதனின் ஊர்க்காரன் . கண்ணனுக்கும் தேவிக்கும் திருமணம் முடிந்தபின் , கண்ணன் இல்லறவாழ்க்கையில் பிசியானான் . அந்நேரத்தில் பிரபுதான் மதனுக்கு எல்லாமுமாக இருந்தான் .

 

‘தியேட்டர்ல வந்து இனிமே படமே பாக்கக்கூடாது டூட் .’ என்றான் பிரபு .

 

‘ஏன் டூட் ’

 

‘பின்ன . சன்டிவில போடற விளம்பரத்தவிட அதிகமாக போடுரானுங்க .’ என்று சொன்னான் .

 

வழக்கம்போல இடைவேளை நேரத்தில் செல்லை நோண்ட ஆரம்பித்திருந்தான் மதன் .

 

‘ஹே டூட் . இத நா உங்கிட்ட காட்டிட்டனா ?’ என்று ஒரு புகைப்படத்தைக்காட்டினான் மதன் .

 

‘இல்ல டூட் ’ என்றவாறே அதைப்பார்த்தான் . ஒரு அழகிய குழந்தை செரலாக் மற்றும் ஜூனியர் ஹார்லிக்ஸின் உதவியால் கொழுக் மொழுக் என்றிருந்தது .

 

‘நல்லா இருக்குடா பாப்பா ’ என்றான் பிரபு . தொடுதிரையைப்பிடித்து இழுக்க , அந்த படம் ஜூம் அவுட் ஆகி ஒரு குடும்பப்போட்டோவைக்காண்பித்தது . ஒரு ஆண்டி , அவளின் கையில் தன்னுடைய குழந்தையை வைத்திருந்தாள் .

 

‘யாரு டூட் இது ?’ என்றான் பிரபு .

 

‘என்னோட மையல்விழி டா . பார்த்தியா ? அவ பேபி எவ்ளோ அழகா இருக்கு . அப்படியே அவளோட கண்ணு . இவ பாரேன் . காலேஜ் படிக்கும்போது விலுவிலுனு இருந்தா . இப்போ என்னடானா நல்லா ஊறிட்டா .கல்யாணமானாலே பொண்ணுங்க பொதபொதன்னு ஆயிடுவாங்க போல .’ என்றான் மதன் .

 

‘டேய் . இவ மொவரைய எதுக்குடா வச்சிருக்க ? அறிவில்ல உனக்கு ?’ என்று கோவப்பட்டவாறே திட்டினான் பிரபு . அவனுக்கு மதனின் காதலைப்பற்றி நன்கு தெரியும் . அவள் ,. அவனைவிட்டு சிங்கப்பூர் மாப்பிள்ளையைத்திருமணம் செய்துகொண்டு சென்றால் என்பதனை அறிந்து அவனை விட அதிகமாய்த்துடித்தவன் . திருமணத்தன்று மதன் மெல்லிய சிரிப்பை உதிர்த்தவாறே ‘அவ என்னோட மையல்டா . கண்டிப்பா என்ன தேடி வருவா’ என்று கூறியதெல்லாம் இன்னும் ஞாபகத்திலிருந்தது .

 

பிரபுவின் கேள்விக்கு மதன் பதிலேதும் தெரிவிக்காமல் அந்த போட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தான் . ஓரளவு கோவத்திலிருந்து வெளிவந்து அவனிடம் கேட்டான் .

 

‘நீ இப்படில்லாம் பன்றதுக்கு பேர் என்னனு தெரியுமா ?’ என்று கேட்டான் .

 

‘ம் . தெரியும் டூட் . காதல்’ என்று அவன் கூறும்போது தியேட்டரில் படம் போட்டிருந்தார்கள் . அந்த சத்தத்தில் பிரபுவுக்கு மதன் கூறியது காதில் விழவில்லை .

 

‘என்ன டூட் ’ என்று சத்தமாய் மீண்டும் கேட்டான் பிரபு . மீண்டும் கூறினான் மதன் , கொஞ்சம் சத்தமாக , மனதில் உணர்ச்சி பொங்க

 

‘காதல் ……………………………………………………………………………………. காதல் ’

 

 

——— முற்றும் ——–

License

காதல் காதல் - குறுநாவல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.