1

 

‘மச்சி !  ஒரு பொண்ணு பஸ்ல உன்ன பாக்குதுனு வச்சிக்கோயேன் . அவள நீ அடிச்சி போட்ட மாதிரி பாக்கனும் . அவ பாக்கறப்போலாம் நீ அவ கண்ணையே பாத்துட்டு இருக்கனும் . தப்பித்தவறி அவ பாக்கற நேரத்துல நீ அவள பாக்காம வேற எங்கயாச்சும் வேடிக்க பாத்தனு வச்சிக்கோ , அவ்ளோ தான் . அதுக்கப்றம் நீ தலகீழா நின்னா கூட அவ உன்ன பாக்கமாட்டா . அதே மாதிரி அவ கண்ண மட்டும்தான் பாக்கனும் . வேற எங்கயும் பாக்கக்கூடாது . முக்கியமா அவ கழுத்துக்கு கீழ தப்பித்தவறி கூட உன் கண்ண ஓடவிட்றாத  . ’ என்று தன்னுடைய அட்வைஸ்களை அள்ளிவீசினான் கண்ணன் . இந்த அறிவுரைகளில் ஒருவார்த்தை விடமால் மனப்பாடம் செய்துகொண்டிருந்த மதனுக்கு காதல் வந்துவிட்டது என்று தனியாக சொல்லவேண்டுமா ?

 

‘அப்றம் மச்சி ’

கண்ணனின் அடுத்தகட்ட அட்வைஸ்களில் மெய்யுருகி தவித்தவாறே கேட்டான் மதன் .

 

‘அப்பறம் , பொண்ணுங்களுக்கு பஸ்ல கமெண்ட் அடிக்கறது ரொம்ப பிடிக்கும் . ஆனா பிடிக்காதமாதிரியே சிணுங்குவாங்க . அட் த சேம் டைம் , அவங்கள கலாய்க்கற மாதிரி கமெண்டக்கூடாது . அவங்க கிட்ட நாம கெஞ்சுறமாதிரி தான் பேசனும் .’

 

‘அது எப்படி மச்சி ?’

 

‘அது ரொம்ப சிம்பிள் மச்சி . எப்பவும் உன் பக்கத்துல உன்னவிட மொக்கையான பசங்களையே வச்சிருக்கனும் . அவ உன்ன பாக்கற நேரம் , என்னப்பா இப்போலாம் கண்டுக்கவே மாட்டேன்ற ?, அச்சோ உன்னோட கண்ணாலயே என்ன கொன்னுடுவ போல இருக்கே ! இந்த மாதிரி அந்த பொண்ண பாத்துட்டே உன் பக்கத்துல இருக்க ஃப்ரண்டுகிட்ட பிட்டு போடனும் மச்சி . அதேநேரம் உன் பக்கத்துல க்ரௌட மட்டும் அண்டவிட்ராத. நீ ரொமான்டிக்கா பேசுற டயலாக்ஸ்லாம் உல்டா பண்ணிவிட்ருவாய்ங்க . மறந்துடாத மச்சி . நீ போட்ற பிட்டு நல்லா கடல்ல போடற நங்கூரம் மாதிரி வலுவா இருக்கனும் . புரியுதா ?’

 

ம் ம் என்று பசுமாடு கணக்காய் தலையை ஆட்டிவிட்டு அஞ்சேகால் 68 பஸ்சுக்காக காத்திருந்தான் . மனதெல்லாம் அவளிடம் பேசப்போகிற டென்சனில் இருந்தவனுக்கு கண்ணனின் அறிவரைகள் பிராக்டிகல் மார்க்கைப்போல் கைக்கொடுத்தது எனலாம் . 14 வயதினில் தாய் , தந்தையை இழந்த மதனுக்கு எல்லாமே அவனுடைய மாமன் தான் . பத்தாவது முடித்ததும் எப்படியெப்படியோ அடித்து பிடித்து ஒரு பாலிடெக்னிக்கில் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ பிரிவில் சேர்த்துவிட்டார் அவனுடைய மாமா . வழக்கம்போல கல்லூரி முதல் வாரத்தில் முதல் பெஞ்சில் தன்னுடைய படிப்புக் கனவுகளை அடுக்கிக்கொண்டே அமர்ந்தவன் அடுத்த வாரத்திலேயே கடைசி பெஞ்சிற்கு தெரித்து ஓடும் நிலைக்குத்தள்ளப்பட்டான் . கடைசி பெஞ்ச்சிற்கு உரித்தான சிகரெட் , சரக்கு போன்றவைகளை சரியாய் ஒரு செமஸ்டருக்குள் கற்றுத்தேர்ந்து அதில் அவுட்ஸ்டான்டிங் ஸ்டூடன்ட் ஆகிவிட்டான் . ஒருமுறை அரைத்தூக்கத்தில் இருந்த மதனை எழுப்பிய புரபசர் ஒரு கேள்வியைக்கேட்டு அவனை மடக்கமுயல , அவனோ தட்டுத்தடுமாறி காதல்கொண்டேன் தனுஷ் மாதிரி விடையளித்து தேவியை மடக்கிவிட்டான் . புதுத்தோழியாய் அறிமுகமான தேவி  , பின்னாளில் மதனின் பைனான்சியர் ஆனாள் . மதனின் மாமாவிற்கு இவன்மேல் இருக்கும் பாசமளவிற்கு , அவனுடைய அத்தைக்கு இல்லை . பெரும்பாலான நாட்கள் காலையில் சமைக்கமாட்டார்கள் . பசியுடன்தான் திரிவான் . அவனுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துவந்த தேவி , மதனை மகன்போல் நடத்தினாள் . திடுதிப்பென ஒரு நாள் ‘I LOVE YOU ’ என்று அவள்சொல்லிவிட , அதேநேரம் இவனின் ஆரூயிர்த்தோழன் கண்ணன் அவளைக்காதலிப்பதாய் இவனிடம் சொல்ல , நட்புக்காக அவளைத்தியாகம் செய்தான் .

 

இதோ கல்லூரி இறுதி ஆண்டு . இன்று அவனுக்குள் பதட்டமும் படபடப்பும் கொஞ்சம் அதிகமாய்த்தானிருந்தது . காலையில் அவளை மட்டும் பார்த்திராமல் இருந்திருந்தால் இப்பிரச்சனையே வந்திருக்காது . வெள்ளைநிறச்சுடிதாரில் , ஆங்காங்கே பிங்க் கலர் பூக்களும் , அதற்கு மேட்சாக வெள்ளைக்கலர் சாலும் மின்ன , சந்தன நிறத்தில் பெரும் அழகாய் காட்சியளித்துக்கொண்டிருந்தாள் அவள் . பஸ்ஸில் நிறைந்திருந்த கூட்டமும் வேர்வை நாற்றமும் தாண்டி அவளின் கருங்குழலில் இருந்த பிங்க் நிற ரோஜா , அவள் தாக்கியதுபோலவே இவனின் நாசியைத்தாக்கியது . மெல்ல திரும்பியவளின் முகத்தைப்பார்த்த நொடி , அவ்வளவு அழகாய் அவனைக்கடந்தது எனலாம் . கரும்நிறத்தில் விழும் அருவிபோலிருந்த அவளின் கூந்தல் நேர்த்தியாய் பின்னப்பட்டு , வகிடு எடுத்து சீவப்பட்டிருக்க , இருபுருவங்களுக்கும் இடைபட்ட இடத்தில் ஒரு கருநிற ஸ்டிக்கர் பொட்டும் , , அதற்கு கொஞ்சம் மேல் சிவன்கோயில் திருநீறும் இருந்தது . தங்கத்தால் ஆன ஜிமிக்கி , இவளால் அழகாய்த்தெரிந்தது அவனுக்கு . பெண்களுக்கு சாதரணமாகவே கண்கள் கவர்ந்திழுக்கும்படியாய் இருக்கும் . இவளுக்கு சொல்லவா வேண்டும் . நல்லவேளை , பஸ்ஸாக இருந்ததால் அவளின் உதட்டைப்பார்த்துவிட்டு மட்டும் வந்தான் . என்ன செய்ய ? தேனிருக்கும் மலரைத்தேடி வண்டு வரத்தானேச்செய்யும் . இவளின் காந்த சிரிப்பை படிக்கட்டில் இருந்தவாறே பார்த்தவன் , அடுத்தநிமிடமே இரும்புத்துகளாய் அவளிடம் சென்றடைந்தான் . அவளின் அழகில் கால்பங்கை ரசிப்பதற்குள் பஸ் ஸ்டாண்ட் வந்துவிட , வேறுவழியே இல்லாமல் அவளின் பின்னாலயே சென்று அவளின் காலேஜைக்கண்டுபிடித்தான் .

 

அதன்பின் கண்ணனுக்கு போன்செய்து காலேஜை கட் அடித்துவிட்டு வர சொன்னான் .

 

‘எந்த காலேஜ் மச்சி ?’

 

‘டிபிடி பாலிடெக்னிக் டா . பர்ஸ்ட் இயர் ஜாய்ன் பண்ணிருக்கா . இன்னும் என்ன டிபார்ட்மென்ட்னு தெரில .’

 

‘பொண்ணு பேரு மச்சி ?’

 

‘தெரில டா . அவள இன்னைக்குக்காலைல தான் பார்த்தேன் . சான்ஸே இல்ல மச்சி .  சண்டாளி , கண்ணாலயே கொல்றா மச்சி . என்னால முடில மச்சி . அப்படியே சுர்ருனு ஏறுது . ஓடிப்போய் எதிருல வருதுபாரு , அந்த பைக்க அப்படியே எட்டி ஒதைக்கனும்னு தோனுது .  ’ என்று புலம்ப ஆரம்பித்தவனிடம் கண்ணன் அன்றைய நாள்முழுதும் மாட்டி வதைபட்டுக்கொண்டிருந்தான் .

 

‘மச்சி ! நீ என்ன  பண்ணுவியோ எனக்குத்தெரியாது . உன் தங்கச்சிய கரெக்ட் பண்ண ஒரு வழி சொல்லு .’ என்று சாயங்காலம் பஸ்ஸுக்கு காத்திருந்த கண்ணனிடம் மதன் கேட்டபின்தான் தன்னுடைய அட்வைசை பொழிந்தான் .

 

காலையிலிருந்து புலியைப்போல் இருந்தவன் , அவள் வந்தபின் அப்படியே எலியானான் . கண்ணன் மட்டுமல்ல , அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் பலரின்கண் அவள்மேல்தான் இருந்தது . அவளோ இவர்கள் யாரையும் மதிக்காமல் அவளின் தோழியுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள் . டீக்கடையில் தம்மடித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞன் இவளைப்பார்த்ததும் பார்க் செய்திருந்த பைக்கை எடுத்து எட்டுபோட்டு படம் ஓட்டிக்கொண்டிருந்தான் . ஒவ்வொருத்தனும் தங்களின் அடிமையாய் இருக்கும் நண்பர்களிடம் தங்களின் அதீத பாசத்தைக்காட்டிக்கொண்டிருந்தனர் .

‘மாப்ள . ஆக்சுவலா இந்த எக்சாம்லாம் எனக்கொரு சப்ப மேட்டுருடா ’ என்றான் ஒருவன் . ‘ஹே டூட் . ஐ யம் கோன்னா பை எ நியூ ஐ போன் ’ என்றான் ஒருவன் . ‘என்னடா பஸ் இது ? நேரநேரத்துக்கு வரவே மாட்டேங்குது . நாளைல இருந்து கார்லயே வரபோறேன் மச்சி’ என்றவாறு ஒவ்வொருவனும் அவனுடைய நண்பர்களிடம் கத்தி சொல்லிக்கொண்டிருந்தனர் .இன்னும் சிலரோ அவளை விழுங்கிவிடுவதுபோல் பார்த்துக்கொண்டிருந்தனர் . தனித்து இருந்த இளைஞர்களோ , இவளை கண்டும் காணாததுபோல் தங்களின் ணெல்போனை எடுத்து அம்பானி ரேஞ்சுக்கு நோண்டி கொண்டிருந்தனர் . அவர்களை எல்லாம் பார்க்கும்போது காண்டின் உச்சத்திற்கே சென்றுவிட்டான் மதன் . மதனை ஓரளவு சமாதான படுத்தியவாறு ஆறுதலாய் உடனிருந்தான் கண்ணன் .அந்நேரத்திற்கு பஸ் வரவும் , பெண்கள் எல்லாம் முன்னால் ஏற , ஆண்கள் எல்லாம் பின் வாயிலில் ஏறினார்கள் . மதன் வேகவேகமாய் பஸ்ஸினுள் புகுந்து அவள் இருக்குமிடத்தை அடைந்தான் . பதட்டத்தை ஓரங்கட்டியவாறே அவளிடம் பேசத்துணிந்து வாயெடுக்கும்முன் அவளே பேசினாள் .

 

‘அண்ணா ! கொஞ்சம் பின்னாடி தள்ளி நில்லுங்கணா . எல்லாரும் நெருக்கறாங்க . ப்ளீஸ் ’

License

காதல் காதல் - குறுநாவல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.